Thursday, March 18, 2010

விஜய்-சூர்யா நேரடி மோதல்!

மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த சுறா, நாலு காய் பாய்ச்சலில் முன்பாகவே வரப்போகிறது. இப்படத்தை ஏப்ரல் 14 ந் தேதி ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறது சன்.
இப்படி அஸ்திரத்தை ஏவுவார்கள் என்பதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லையாம் சிங்கம்.

சாண் ஏறினால் சாண் சறுக்குகிற நிலையில்தான் இருந்தார் விஜய். சமீபத்தில் வெளிவந்த அவரது படங்கள் இழுத்துக்கோ பறிச்சிக்கோ நிலையில்தான் வசூலை சந்தித்தது. இனிமேல் வைக்கிற ஒவ்வொரு ஸ்டெப்பும் அதிரடியாக இருக்கணும் என்று முடிவெடுத்த விஜய், சுறாவின் றெக்கையை சாணை பிடித்துதான் வைத்திருக்கிறாராம். படத்தின் அத்தனை காட்சிகளும் செம ஷார்ப், பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் கியாரண்டி என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

தனிக்காட்டு உறுமலாக இருக்கும் என்று நேற்றுவரை நம்பிக் கொண்டிருந்த சிங்கம் டீமை இந்த அரசல் புரசலான செய்தி அம்பு போல் தாக்கியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா?

இசைஞானி இளையராஜா காவல் துறை ஆணையரிடம் புகார்

எழுபத்தைந்து எண்பதுகளில் வந்த இளையராஜாவின் பாடல்கள் அற்புதமான அகர்வால் ஸ்வீட்! அதை அனுபவிப்பதே சுகம்!
ஆனால் இந்த அற்புதமான பாடல்களை தந்த அந்த மாமேதைக்கு போய் சேர வேண்டிய ராயல்டி சமாச்சாரங்கள் போய் சேருகிறதா என்றால் இல்லவே இல்லை என்கிறார்கள்.

அந்த காலத்தில் இந்த பாடல்களை வாங்கிய எக்கோ இசை நிறுவனம், இப்போதும் அவற்றை பணமாக்கி வருகிறது. இவர்களுக்குள் போடப்பட்ட ஒப்பந்தந்தில், இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்தில் வேறு எந்த விஞ்ஞான முறைகள் வந்தாலும் அப்போதும் இப்பாடல்களை விற்கும் உரிமை எங்களுக்கே என்று தெளிவாக எழுதி வாங்கியிருக்கிறார்களாம் அந்த நிறுவனத்தினர். இன்டர்நெட், எப்.எம், தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத அந்த நேரத்தில் கையெழுத்திட்ட ராஜா, இப்போது கண்ணெதிரே தனது பாடல்கள் களவு போவதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார். அதே நேரத்தில் தனது பாடல்களை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு மொத்தமாகவும் விற்றுவிட்டார்.

அப்போது வாங்கியவர்களுக்கும், இப்போது வாங்கியவர்களுக்கும் க்ளாஷ். பிரச்சனையை போலீஸ் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவெடுத்த இசைஞானி, இன்று பிற்பகல் சென்னை மாநகர காவல் துறை ஆணையரை சந்தித்திருக்கிறார். எக்கோ இசை நிறுவனம் மீது புகாரும் எழுதி கொடுத்திருக்கிறார். இந்த அபஸ்வரத்தின் முடிவு சுபஸ்வரத்தில் முடியுமா?